வள்ளலாரது பாடல்கள் தொகுக்கப் பெற்று, “திருவருட்பா” என்ற பெயரில் 1867இல் வெளியாயின. பழமைப்பிடிப்புள்ள சைவர்களோ தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய பஞ்சபுராணங்களே அருட்பாக்கள் என்றும் - பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள் என்றும் கூறி வள்ளலாரது பாடல்களைக் ‘குற்றமுடைய மருட்பாக்கள்’ என்று கண்டித்தனர். வள்ளலாரது பாடல்களை அருட்பா என்று நிரூபிக்கும் பொருட்டு வள்ளலாரது குழுவினரும்; மருட்பா என்று நிரூபிக்கும் பொருட்டு நாவலரும் அவரது குழுவினரும் கண்டனப் போர்க் கொடிகளைத் தூக்கினர். பிரச்சினை, நீதிமன்றம்வரைகூடச் சென்றது.இன்று, தமிழ் இலக்கிய, சமய வரலாற்றில் வள்ளலாரின் இடமும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.