
காந்தியின் கொலைக்குப் பின்னால் உள்ள அரசியல் சமூகக் காரணங்களை அண்மைக்கால வரலாறு போதியமட்டும் நமக்கு அளித்து விட்டது. ஆனால் வரலாறு சொல்லத் தவறிய விஷ்யங்கள் பற்பல. கோட்சே எப்படி சிந்தித்தான், காந்தியைக் கொல்வது என்று முடிவெடுத்தபின் அவனது மனநிலை எப்படி இருந்தது? எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படி செயல்படுத்தினார்கள்? கோட்சே எப்படிப்பட்ட மனிதன்? வெறும் பெயராகவும், புகைப்படமாகவும் நமக்கு இதுவரை அறிமுகமாகியுள்ள நாதுராம் கோட்சே முதல் முறையாக மாலனின் ஜன கண மனவில் நமக்கு அறிமுகமாகிறான். வரலாறு எங்கு முடிகிறது, புனைவு எங்கே தொடங்குகிறது என்று பிரித்துப் பார்க்க ஒரு நொடி அவகாசம் கூட அளிக்காமல் விறுவிறுவென்று இந்த நாவலைக் கொண்டு செல்கிறார் மாலன். பத்திரிகையில் வெளிவந்த போது ஏராளமான சர்ச்சைகளையும் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்ற இந்நாவல் மாலனின் மிக முக்கியப்படைப்பாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது