
இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையையும், அவரது ஆயுட்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அன்றைய தமிழ் இலக்கிய உலக நிலைமையையும் எடுத்துக்கூறும் முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டது. இந்த முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்று, இன்றும் அந்த எழுத்தாளரையும் அவரது காலச் சூழ்நிலையையும் தக்க முறையில் இனம் காட்டி நிற்கிறது என்பதற்கு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வரலாற்று நூல்களை ஆராயப் புகும் ஆசிரியர்கள் எவரும், இந்த நூலை மறக்கவோ, இதன் சிறப்பைப் பாராட்ட மறுக்கவோ முனையவில்லை என்பதே சான்றாகும். மேலும், புதுமைப்பித்தனைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர் யாவரும் இந்நூலின் பகுதிகளை அத்தாட்சியாக மேற்கோள் காட்டுவதையும் நான் காண்கிறேன். இவை யாவும் இதன் ஆசிரியரான எனக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் அளிப்பனவாகும். - தொ. மு. சி. ரகுநாதன்